
அருட்பணி. ஜெரிவின்சென்ட்
பங்குத்தந்தை
அன்பிற்கினிய நெஞ்சங்களே!
தென் தாமரைகுளம் தூய பனிமய அன்னையின் பாதுகாவலிலும், பரிந்துரையிலும் வாழும் அன்புடைய மக்களுக்கு நமது இணையதளத்தின் (Web TV) வழியாக என் வாழ்த்துக்களையும், இறை ஆசீரையும் தெரிவித்துக் கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
காலம் எப்போதும் முன்னோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது. காலம் எனும் நதிக்கரையில் மனிதமூளை, இறைத்தூண்டுதலால் கண்டுபிடித்துத் தந்த பொக்கிஷங்கள் ஏராளம். அவை மனித வாழ்வை மேம்படுத்தி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் தகவல்தொடர்பு சாதனங்களின் அபார வளர்ச்சி, உலகையே “தகவல் யுகம்” ஆக மாற்றியுள்ளது.
உள்ளங்கைகளுக்குள் உலகை உருட்டி விளையாடும் கலை மனித குலத்துக்கு வாய்த்து இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டரின் வருகைக்குப் பின், வாழ்க்கை முறையே மாறிப் போய்விட்டது.
வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் தென் தாமரைகுளம் என்றும் பின்தங்கியதில்லை என்பது நமக்கு எப்போதும் பெருமையே. இப்போதும் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் நமது சொந்தங்களை, தாய்மண்ணோடு நட்பு உறவாட வைப்பதில் நமது இணையதளம் (Web TV) மிகுந்த பங்காற்றுகிறது. பங்கின் செயல்பாடுகளை, வளர்ச்சியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை படம்பிடித்து காட்டும் காலக்கண்ணாடியாக இது திகழ்கிறது. அனைத்து நிகழ்வுகளும் பதிவுசெய்து வைக்கப்படுவதால் காலப்பெட்டகத்தின் பேழையாக தவழ இருக்கிறது. எதிர்கால சந்ததி, தங்கள் முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய அரிய சுவடியாக திகழ்கிறது.
நமது குழந்தைகளின் மழலைச் சிரிப்பை, இளையோரின் ஆக்கப் பூர்வ செயல்பாடுகளை, குடும்பங்களின் மகிழ்ச்சித் தருணங்களை, முதியவர்களின் ஆன்மீக அனுபவங்களை, அன்பியங்களின் அருஞ்செயல்களை, பக்த சபைகள், இயக்கங்களின் இறையாட்சிப் பணியை, பங்கு நிர்வாக குழுக்களின் மேலாண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இம்முயற்சி பாராட்டத் தக்கது. இதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் மீடியா குழுவிற்கும், பங்குச் சமூகத்திற்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறென்.
தகவல் தொடர்பு யுகத்தில், விஞ்ஞானம் உருவாக்கித்தரும் கருவிகள், நமது வாழ்க்கையை மேம்படுத்த உதவ வேண்டும். நம்மை இணைப்பதற்கும், ஒரே குடும்பமாக உருவாக்குவதற்கும், நமது மண்ணை இறையாட்சி சமூகமாக உருவாக்கவும் நமது இணையதளம் துணை நிற்கட்டும் என வாழ்த்தி பனிமயத்தாயின் வேண்டுதல் நமக்கு குறையின்றி கிடைக்க ஆசிக்கின்றேன்.