Convent & Special School For Differential Abled

இறைபராமரிப்பு மரியன்னை மகளிர் சபை

ஏழைகள் அனாதைகள் உள்ளவரை எம்அன்புப்பணி என்றும் ஓய்வதில்லை

(எம்சபை ஸ்தாபகர் புனித லூயிஸ் குவனெல்லா)

இறைவன் எம்சபை ஸ்தாபகர் புனித லூயிஸ் குவனெல்லா வழியாக தொடங்கிய இந்த அன்புப் பணி, அதாவது மன நலம் குன்றியவர்களுக்கு சேவை செய்தல், முதியவர்கள், ஆதரவற்றோர், அனாதைகள் மற்றும் ஆயர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அம்மறைமாவட்டத்தில் பணிபுரிவதே எங்கள் சபையின் நோக்கம்.  இந்த அன்புப் பணியை நாங்கள் பல நாடுகளில் செய்து வருகிறோம்.

அப்படிப்பட்ட உன்னதமான பணியானது இம்மண்ணில் அன்றைய ஆயராக இருந்த ஆயர் மேதகு லியோன்.அ.தர்மராஜ் அவர்களின் அழைப்பிற்கு ஏற்ப, மற்றும் இந்தப் பங்கின் அன்றைய பங்குத்தந்தை Rev.Fr.Romald அவர்களின் அழைப்பிற்கு ஏற்ப எம்குவனெல்லியின் அருட்சகோதரிகள் 8-12-2002 அன்று எங்களது பாசமிகு மாநிலத் தலைவி Rev.Sr.Victoria William, Superior.Rev.Sr.Christy  மற்றும் இரண்டு அருட்சகோதரிகள் Rev.Sr.Mary மற்றும் Rev.Sr.Loyola அவர்களால் இந்த மண்ணில் எங்களது அன்புப் பணியானது தொடங்கப்பட்டது. அன்றைய பங்குத் தந்தையின் ஆலோசனைப்படி நாங்கள் இந்த பங்கிற்கு எங்களது முழு அர்ப்பணிப்பைக் கொடுத்து செய்து வருகிறோம்.  உதாரணமாக மறைக்கல்வி எடுத்தல், அன்பிய வழிபாட்டில் கலந்து கொள்ளுதல், மழலைப் பள்ளி நடத்துதல், மாலை நேரப் பள்ளி, நோயாளிகள் மற்றும் வீடு சந்தித்தல் பணிகளை செய்து வந்தோம்.  இப்படி நாங்கள் இந்த பணிகளை செய்து வரும் போதே எங்களது சபைஸ்தாபகரின் அன்புப் பணியான  மனநலம் குன்றியவர்களுக்கு அன்பு பணியை தென் தாமரைகுளத்தில் தொடங்குவதற்காக நாங்கள் 2007 லிருந்து அருகில் இருக்கும் ஊர்களுக்குச் சென்று மனநலம் குன்றியவர்களை சந்திக்க ஆரம்பித்து அவர்களுக்கு பணிபுரிவதை செயல் வழியாவதற்கு ஆயரின் துணையை நாடினோம்.  அவரும் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தார்.

எங்கள் ஸ்தாபகர் எப்போதும் மனநலம் குன்றியவர்களை “இறைவனின் செல்லக் குழந்தைகள்” என்றே அழைப்பார்.  எனவே இந்த செல்லக் குழந்தைகளுக்காக    11/2/2009 அன்று மேதகு ஆயர். பீட்டர்ரெமிஜியுஸ், பங்குத்தந்தை Rev.Fr.பென்சிகர் எங்கள் மாநில தலைவி Rev.Sr.விக்டொரியா வில்லியம் மற்றும் அவர்களுடைய ஆலோசகர்கள் அன்றைய இந்த இல்லத் தலைவி Rev.Sr.கிறிஸ்டி மற்ற சகோதரிகள் Sr.இன்னாசி, Sr.வினிதா சில நவகன்னியர்கள் மற்றும் இப்பங்கு மக்கள் இவர்களால் இந்த அன்புப் பணியானது தொடங்கப்பட்டது.

“ஏழைகளால் நம் இல்லத்தை நிரப்புவோம்”  என்ற எம்சபை ஸ்தாபகரின் பொன்மொழிக்கேற்ப எம்சகோதரிகள் சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று மாற்றுத் திறன் படைத்த எம்செல்லக் குழந்தைகளைப் பள்ளி வாகனம் மூலமாக எம்சிறப்புப் பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களின் உன்னத உடனிருப்பால் எம்இல்லத்தையும் எம்சிறப்புப் பள்ளியையும் எழிலுற செய்கின்றனர்.  மேலும் எம்பள்ளிக்கு வரும் செல்லக் குழந்தைகளுக்குத் தேவையான

இயல்பியல் பயிற்சி (Physio Therapy) பேச்சு மற்றும் மொழித்திறன் பயிற்சி (Speech Therapy) மருத்துவ ஆலோசனை (Medical Check-Up) திறமைகள் மலர்ந்திடும் பாசறை (Vocational Training) வண்ணமயமான ஓவியப் பயிற்சி ( Drawing)

என பல வகைகளில் குழந்தைகளின் திறமைக்கு ஏற்ப பயிற்சி அளித்து அவர்களின் உடல் நலனில் தேர்ச்சி பெற்று அவர்களே அவர்களின் தேவைகளை செய்து கொள்வதற்கு பயிற்சி அளிக்கிறோம்.

மேலும் இச்செல்லக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் விழா மற்றும் அனைத்து விழாக்களையும் சிறப்பித்து அவ்விழாக்களில் அவர்களை பங்கேற்க வைக்கிறோம்.  குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் பொருட்டு அவர்களுக்குப் போதிய பயிற்சிக் கொடுத்து மற்ற பள்ளிகளுடனும், மாவட்ட அளவிலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து பரிசுகள் பெற ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இந்த அன்புப்பணி ஆரம்பித்த நாள் முதல் எம்முன்னாள் பங்குத்தந்தை மற்றும் இப்போதைய பங்குத்தந்தையும், எம்பங்கு மக்களும் எங்களுக்குத் தாராள உள்ளத்துடன் இந்தப் பணிக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்கள்.  மற்ற மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்துவருகிறார்கள்.  மற்றும் எம்பங்கு மக்கள் தினமும் எம்பள்ளிக்கு வருகை தந்து எங்கள் செல்லக் குழந்தைகளுக்கு மதிய உணவை ஊட்டி வருகிறார்கள்.  இது எங்களுக்குப் பேருதவியாக உள்ளது.

எனவே  நாங்கள் எங்கள் பங்கு மக்களுக்கும் மற்ற மக்களுக்கும் எங்களது இதயம் நிறைந்த நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்.   இறைவன் இவர்களை நிறைவாக ஆசிர்வதித்து வழிநடத்தவும், மேலும் நாங்கள் எங்கள் அன்புப் பணியை அர்ப்பண உணர்வுடன் செய்ய இறைவன் எங்களை நிறைவாக ஆசிர்வதிக்கவும், இந்தப் பணிக்குத் தேவையான உதவிகளை செய்யவும் மன்றாடுகிறோம்.

இந்தப் பணிக்கு உதவிக்கரம் நீட்ட நினைக்கும் அன்பு உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறோம்.  உதவிச்செய்ய முன்வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இறைபராமரிப்பு மரியன்னை மகளிர் சபை,

குவனெல்லியன் அருட்சகோதரிகள்,

பனிமய அன்னை இல்லம்,

தென் தாமரைகுளம்,

கன்னியாகுமரி மாவட்டம்.

Cell :   +91 7708309844 +91 9600820430